ஆந்திர பிரதேசத்தின் ராயடூர் பகுதியில் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக ஹோட்டல்கள் மூடப்படுவதாக தவறான தகவல்களை வீடியோவாக தயாரித்து சமூக வலைத்தளங்களில் பரப்பிய ஒரு யூடியூபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியது. இதனை அடுத்து விசாரணை மேற்கொண்ட போலீசார், வணிக சிலிண்டர் விநியோகம் இயல்பாகவே நடைபெற்று வருவதாகவும், எந்தவித தட்டுப்பாடும் இல்லை என்றும் உறுதி செய்துள்ளனர்.

தவறான தகவல்களை பரப்புவதன் மூலம் பொதுமக்களிடையே அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் இந்த யூடியூபர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற தவறான தகவல்களை பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் எந்தவொரு தகவலையும் பகிர்வதற்கு முன் அதன் உண்மைத்தன்மையை சரிபார்க்க வேண்டும் என போலீசார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.