நேபாளத்தின் கோர்கா மாவட்டத்தில் உள்ள மனகாமனா கோவிலுக்கு யாத்திரை சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த யாத்ரீகர்கள் சாலை விபத்தில் சிக்கி, ஏழு பேர் உயிரிழந்தனர். மேலும் ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.

பொள்ளாச்சி மற்றும் தேவகோட்டையைச் சேர்ந்த மொத்தம் 24 யாத்ரீகர்கள் மனகாமனா கோவிலுக்கு யாத்திரை சென்றிருந்தனர். இந்த விபத்தில் ஏழு பேர் உடனடியாக உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பலியானவர்களின் உடல்கள் காட்மாண்டுவுக்கு கொண்டுசெல்லப்பட்டு வருகின்றன. அங்கிருந்து சென்னைக்கு அனுப்பப்படும் என தமிழக அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து குறித்து தமிழக அரசு சார்பில் நேபாள அதிகாரிகளுடன் தொடர்பு கொள்ளப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள தமிழக முதலமைச்சர், விரைவில் உடல்களை தமிழ்நாடு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.