மத்திய கிழக்கு போர் காரணமாக இந்திய பங்குச் சந்தையில் பெரும் வீழ்ச்சி: ஒரு வாரத்தில் ரூ.20 லட்சம் கோடி இழப்பு
மத்திய கிழக்கு நாடுகளில் ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் இடையே நிலவும் போர் பதட்டம் இந்திய பங்குச் சந்தைகளில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள முதலீட்டாளர் சொத்துகள் அழிக்கப்பட்டுள்ளன.
சர்வதேச பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் விலைகள் வேகமாக உயர்ந்துள்ளதால், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பெருமளவில் தங்கள் முதலீடுகளை இந்திய சந்தையிலிருந்து வெளியேற்றத் தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக வங்கி, வாகனத் துறை உள்ளிட்ட அனைத்து முக்கிய துறைகளிலும் பங்கு விலைகள் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளன.
சந்தை நிபுணர்கள் முதலீட்டாளர்களை அமைதியாக இருக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். முன்னர் ஏற்பட்ட நெருக்கடிகளின் பின்னர் இந்திய பங்குச் சந்தைகள் மீண்டு வலுவடைந்த வரலாற்றைச் சுட்டிக்காட்டியுள்ளனர். எனினும், எதிர்கால சந்தை போக்கு மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழல் தணிவடைவதையே சார்ந்துள்ளது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
வர்த்தக நிபுணர்களின் கூற்றுப்படி, ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் இடையிலான மோதல் குறைவடைந்தால், இந்திய பங்குச் சந்தைகள் விரைவில் தங்கள் இழப்புகளை ஈடுசெய்து கொள்ளும் வாய்ப்புகள் அதிகம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.