கன்யாகுமரி மாவட்டத்தில் இன்று அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் நகர் பகுதிகளில் வீதிகளில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மீனவர்களும் கடலுக்கு செல்வதை தவிர்த்து வருகின்றனர். வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின்படி, அடுத்த இரண்டு நாட்களுக்கு தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மிதமான மழையிலிருந்து கனமழை வரை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் விவசாயிகளுக்கு வேளாண் பணிகளை ஒத்திவைக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே செல்வதை தவிர்க்கவும், அவசர சேவைகளுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்களை அறிவித்துள்ளனர். கல்வி நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.