கன்னியாகுமரியில் கனமழை - அடுத்த இரு நாட்களுக்கு மழை எச்சரிக்கை
கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று காலை முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல பகுதிகளில் வீதிகளில் தண்ணீர் தேங்கி நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நாகர்கோவில் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின்படி, அடுத்த இரு நாட்களுக்கு தமிழகத்தின் தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்களுக்கு கடல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி கடற்கரையில் அலைகள் உயரமாக இருப்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். விவசாயிகளும் தங்கள் பயிர்களை பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.