கடும் வெப்பநிலை காரணமாக ஏற்படும் வெப்ப அழுத்தம் (Heat Stroke) உயிருக்கு மிகவும் ஆபத்தானது என மருத்துவர்கள் இன்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். வெப்பநிலை அதிகரிப்பதால் உடலின் வெப்பநிலை கட்டுப்பாட்டு அமைப்பு செயலிழந்து, அது மரணம் வரை கூட கொண்டு செல்லக்கூடியது என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். வெப்ப அழுத்தத்தின் முதல் அறிகுறி தலைவலி என்று மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். இதைத் தொடர்ந்து தலைச்சுற்றல், குமட்டல், வாந்தி, அதிகமான வியர்வை அல்லது வியர்வை நின்று போதல், சருமம் சூடாக இருத்தல், இதயத் துடிப்பு அதிகரித்தல் போன்ற அறிகுறிகள் தோன்றும் என்று பட்டியலிட்டுள்ளனர். உடனடியாக குளிர்ந்த இடத்திற்கு சென்று, அதிகமான தண்ணீர் குடித்து, குளிர்ந்த நீரில் உடலை ஒத்தடம் கொடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். கடும் வெப்பநிலையில் வெளியே செல்வதை தவிர்த்து, பருத்தி ஆடைகளை அணிந்து கொள்ள வேண்டும் என்றும் ஆலோசனை வழங்கியுள்ளனர்.